செவ்வாய், 30 செப்டம்பர், 2025

 பெருவெளியின் பேரருவி

வெற்று மார்பில்

அறைந்து சிதறி வழிகையில்

இடைநழுவி நீங்கி

நதியில் கலந்து மறையும்

ஓர் ஒற்றை ஆடை நான்.

திங்கள், 29 செப்டம்பர், 2025

 

பௌர்ணமி இரவில்

கடல் அலைகளில் மினுங்கும்

நிலவொளியின் நடனத்தைப் பார்த்தபடி

நாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அதில்

இடைஇடையில் நிலவும்

அலைகளின் மௌன இடைவெளிகளில்

நாம் முத்தமிட்டோம்.

புதன், 17 செப்டம்பர், 2025

 The Sun is fast drowning into the horizon.

Soon we will part with each other.

Our heart is brimming with 

the myriad colours of the dusk.

Break this silence with

A touch

A kiss 

Or

An everlasting embrace.

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

தொடுவானில் 

விரைந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது

அந்திச் சூரியன்.

நாம் இன்னும் சற்று நேரத்தில்

பிரிந்து சென்று விடுவோம்.

அந்தியின் 

எண்ணற்ற வண்ணங்கள் நிறைந்து

தளும்புகிறது நம் இதயம்.


இந்த மௌனத்தை உடைத்தெறி.

ஒரு தொடுகையில்

ஒரு முத்தத்தில்

ஒரு முடிவிலாத் தழுவலில்.


வெள்ளி, 12 செப்டம்பர், 2025

கொலை புரிந்தாயிற்றா?

சரி 

உடனே உன் உடைவாளை 

சுத்தமாக கழுவிவிடு.


நீரில் கரைந்து

நினைவுகள் யாவும் நீங்கி 

அதன்கூர் முனை மின்னிட

மிகுந்த கவனத்துடன் கழுவிவிடு.


பின் அதை

இரகசியமாய் உறைக்குள் ஒளித்து வை

எக்கணமும் விழித்திருக்கும்படி.

புதன், 10 செப்டம்பர், 2025

சொல்லில்லாததை

ஏன் சொல்லில் வைத்தாய்.

உருவில்லாததை

ஏன் உருவில் வைத்தாய்.


சனி, 6 செப்டம்பர், 2025

 உனக்கும் எனக்கும் இடையில் 

திரைகள் விலகும்போது,

அங்கே ஊற்றெடுக்கிறது 

ஓர் அருஞ்சுணை.

இரகசிய இருளெல்லாம் நீங்கி

ஒளிர்கிறது ஒரு சுடர்.

நித்ய மௌனத்தில் 

சப்திக்கின்றன நம் இதயங்கள்.







வியாழன், 4 செப்டம்பர், 2025

 குளத்து நீர்ப்பரப்பில் 

குளிர்ந்து நடுங்குகின்றன

விண்மீன்கள்.

அதில் சுடர்கிறது 

ஒரு வெண்மலர்.

இருள்வானில் மீண்டும் 

ஒளிர்கின்றன விண்மீன்கள்.

அந்தியின் வண்ணங்கள்

ஒவ்வொன்றாக அமிழ்ந்து

இப்பொழுது முழுமுற்றான இருள்.

இருள்வானில் மீண்டும் 

ஒளிர்கின்றன விண்மீன்கள்.