எப்போதும்
ஒரே ஒரு மரத்திலிருந்துதான்
உங்களுக்கு நான் பூப்பறித்து தருகிறேன்.
ஆனால்
அவை ஒவ்வொன்றும்
அன்றலர்ந்த வேறு வேறு பூக்கள்.
எப்போதும்
ஒரே ஒரு மரத்திலிருந்துதான்
உங்களுக்கு நான் பூப்பறித்து தருகிறேன்.
ஆனால்
அவை ஒவ்வொன்றும்
அன்றலர்ந்த வேறு வேறு பூக்கள்.
சார் ஜீரோ பாருங்க!
எத்தனை எத்தனையோ முறை
எனக்கு இதைச்
சுட்டிக் காட்டி இருக்கிறாய்
என் நண்பா!
மறுபடியும் மறுபடியும்
பூஜ்யத்தில் இருந்து தொடங்குதல்
உன் விரல் நுனிச் சொடுக்கல் போல்
அவ்வளவு எளிதானதா?
நிலமெங்கும் நடந்து நடந்து
காதல் விதைத்தோம்.
கரம் மீது கரம் வைத்து
நிலம் நோக்கி நீரூற்றினோம்.
இப்போது
விண்மீன்கள் பூத்த வயலில்
மின்னுகின்றன வெண்மணிகள்.
குருவிகள் அடைகாக்கும் இரவெலாம்
கண்விழித்து காவல் காத்து
வெண்மணிகள் சேகரித்தோம்.
பின்
கதிரவன் உதித்த அவ்வேளை
விண்மீன்களோடு
நாம் காணாமல் போனோம்.
நீ வேறு
இந்த வேளையற்ற வேளையில்
குளிர் காற்றில் வாசனையில்
எதிர்பாரா கணத்தில்
என்னை வந்து அறைகின்றாயே
பாரிஜாதப் பூவே!
உனக்குத் தெரியும்தானே
என் மீது ஊடல் கொண்டு
சற்று முன்னர்தான்
என்னை அவள்
பிரிந்துச் சென்றாள் என்று?
நடுவானில் முழு நிலா
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
அதனடியில் தனித்து நிற்கும்
அத்தி மரத்தில் பழங்கள்
சிவந்து கனிந்து உதிர்கின்றன.
இந்நள்ளிரவில் மென் குளிர் காற்றில்
சிறு வெண் மலர்கள்
மலர்ந்து மணம் வீசுகின்றன.
சிவந்து கனிந்து உதிர்ந்த
ஒரு அத்திப்பழத்தை கையிலெடுத்து
உன்னிடம் பிளந்து காண்பிக்கிறேன்.
நூறுநூறு விதைகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன
நான் இன்னும் சொல்லாத சொற்கள்.
நீயோ, சே! நல்லாவே இல்ல!
என்று சலித்துக் கொள்கிறாய்.
நாம் அருகிருக்கும் காலத்தை கடித்துத்தின்று
படபடத்து பறக்கின்றன
கருநிழல் வௌவால்கள்.
விரைந்து அருகும் அக்காலம்
எண்ணிச் செய்வதறியாமல்,
நூறுநூறு விதைகளின் துயில் களைத்து
இந்நள்ளிரவில் நான் இயற்றிய
சிறு வேள்வி அது!