செவ்வாய், 4 நவம்பர், 2025

 ஒரு நெல் நாத்தை நடுவதற்கு முன்

அதை 

நாத்தங்கால் மண்ணிலிருந்து 

வேறோடு பிடுங்கி

வெளியில் எடுக்க வேண்டும்.

பின் அதன் பச்சை மயிரைப் பற்றி

அதே நாத்தங்கால் நீரில்

முக்கிமுக்கி எடுக்க வேண்டும்

தந்த நிறத்தில் 

அதன் வேர்கள் பளிச்சிடும் வரை.

ஜம்பு நார் கொண்டு கட்டிய

கட்டுகளை

மூங்கில் கூடைகளில்

தண்ணீர் வடிய தலைமேல் சுமந்துச் சென்று

நடவு செய்ய 

நீர் நிறைந்த நிலத்தின் மேல்

சீரான இடைவெளியில் 

ஆங்காங்கே வீச வேண்டும்.

நார் பிரித்து கட்டவிழ்த்து

உன் விரலிடையில் சில நாத்தெடுத்து

மகவின் வாயில் 

அன்னமிடும் அன்னையென

புளித்த சேற்றினுள் 

பச்சைப்பயிர்களை ஊட்ட வேண்டும்.

இனி அதன்பாடு!

அவன்பாடு!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு